மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பேராசிரியர்-முன்னாள் ராணுவ வீரர் பலி

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேராசிரியர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-05-05 23:00 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமம் குடியானத்தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது 53). இவர் தஞ்சாவூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(46). இவர் முன்னாள் ராணுவ வீரர். இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். சுவாமிநாதன் மனைவி, கோவில்வெண்ணியில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுவாமிநாதனும், குணசேகரனும் மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டைக்கு சென்று விட்டு கோவில் வெண்ணிக்கு திரும்பி கொண்டிருந்தனர். கோவில்வெண்ணி அருகே தஞ்சை-நாகை சாலையில் வந்தபோது எதிரில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். குணசேகரன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குணசேகரனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் பலியான சுவாமிநாதன், குணசேகரன் ஆகிய இருவரின் உடல்களும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த கோவில்வெண்ணி வளைவு பகுதியில் சாலை பணி நடைபெற்று வருகிறது. இங்கு சாலை பணி நடைபெறுவதாக எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எனவே இனியாவது நெடுஞ்சாலைத்துறையினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்