மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிகொண்டா அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-05 22:44 GMT
அணைக்கட்டு,

பள்ளிகொண்டா அருகே வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 29), கூலி தொழிலாளி. இவர் நேற்று பகல் 1 மணிக்கு பிராமணமங்கலத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார்.

எல்லையம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலை வளைவில் திரும்ப முயன்றபோது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விஜயகாந்த் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் எல்லையம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயமூர்த்தி, கலைசெல்வன், ராமமூர்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் மற்றும் அணைக்கட்டு தாசில்தார் குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் மேம்பாலம் கட்டுவதற்கு உறுதிஅளித்தால் தான் மறியலை கைவிடுவோம் என்றனர். அதற்கு தாசில்தார் குமார் உதவி கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூறுகையில், ‘அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாரி மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அப்போது இருந்த உதவி கலெக்டர் மேம்பாலம் கட்டித்தருவதாக உறுதி அளித்தார். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. விபத்து ஏற்படும் போதெல்லாம் இதே பதிலை கூறிகின்றீர்கள்’ என்று ஆவேசமாக பேசினார்கள்.

அப்போது தாசில்தார், இங்கு அமைக்கப்பட்டிருக்கும் சிக்னல் விளக்குகளை எரிய வைத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவாக மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், மத்திய அரசு நிர்வாகமும் முடிவெடுக்கும் என்றார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக மறியலின் போது சிலர் மோட்டார்சைக்கிள் மீது மோதிய வேனை அடித்து நொறுக்கினர். இதில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்