கர்ப்பிணியிடம் 8¾ பவுன் நகை பறிப்பு

தூசி அருகே அண்ணனை தாக்கிவிட்டு கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8¾ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-05 23:45 GMT
தூசி

தூசி அருகே உள்ள நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், நெசவு தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (வயது 25), 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவன் - மனைவி இருவரும் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 10.30 மணி அளவில் ஜெயந்தி அவரது அண்ணன் கண்ணாயிரத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். நமண்டி பாலம் அருகில் சென்றபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் திடீரென ஜெயந்தி சென்ற மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் அவர்கள், ஜெயந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8¾ பவுன் நகைகளை பறித்தனர். இதை தடுக்க வந்த கண்ணாயிரத்தை தாக்கினர். இதனால் ஜெயந்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ஜெயந்தி தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, மர்மநபர்கள் விட்டுச் சென்ற மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்