தண்ணீர் தேடி வந்தபோது நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

வருசநாடு அருகே தண்ணீர் தேடி வந்தபோது புள்ளிமான் நாய்கள் கடித்து பலியானது.

Update: 2018-05-06 22:30 GMT
கடமலைக்குண்டு, 

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் புள்ளிமான், கடமான் அதிகளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாததால் பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் உள்ள நீரூற்றுகள், குட்டைகள் தண்ணீரின்றி வற்றியது.

இதனால் அவை தண்ணீர் தேடி அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் புகுந்து வருகின்றன. நேற்று பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் இருந்து பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி அடிவாரத்தில் உள்ள தோட்டத்துக்குள் வந்துள்ளது. அப்போது தோட்டத்தில் இருந்த நாய்கள், புள்ளிமானை விரட்டி கடித்துள்ளன.

இருப்பினும் நாய்களிடம் இருந்து தப்பித்த புள்ளிமான், முருக்கோடை கிராமத்துக்குள் புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மேகமலை வனச்சரகர் இக்பால் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புள்ளிமானை மீட்டனர். கோம்பைத்தொழு கால்நடை மருத்துவர் வெயிலான் வரவழைக்கப்பட்டு காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி புள்ளிமான் இறந்து போனது. அதன்பின்னர் இறந்த புள்ளிமான் வருசநாடு வனச்சரக அலுவலத்துக்கு எடுத்து வந்து பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘ புள்ளிமானை நாய்கள் விரட்டி வந்துள்ளது. நாய்கள் கடித்ததில் மானின் வாய், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் ரத்தநாளங்கள் வெடித்ததன் காரணமாக இறந்துள்ளது. இறந்த புள்ளிமானுக்கு 1½ வயது இருக்கும்.’ என்றனர்.

மேலும் செய்திகள்