தேவதானப்பட்டி அருகே இரு பிரிவினர் மோதல் தொடர்பாக 20 பேர் கைது

தேவதானப்பட்டி அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Update: 2018-05-06 23:15 GMT
தேவதானப்பட்டி, 

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திராகாலனி தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி வன்னியம்மாள் (வயது 56) கடந்த 24-ந் தேதி இறந்து விட்டார். இதற்கிடையே அந்த பகுதியில் மற்றொருவர் இறந்து, 16 நாட்கள் நிறைவடையாமல் இருந்தது.

அதனால் வன்னியம்மாளின் பிணத்தை வழக்கமான தெருவில் கொண்டு செல்லாமல், பள்ளிவாசல் தெரு வழியாக கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு அந்த தெருவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினமும் இரு பிரிவினரும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் கம்பு, கல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கடைகள், வீடுகளும் அடித்து சூறையாடப்பட்டன. மேலும் முகமது என்பவர் தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இந்த மோதலில் இரு பிரிவினரையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜெயமங்கலம் போலீசார் இரு பிரிவினரையும் சேர்ந்த விஸ்வநாதன் (45), பெரியசாமி (50), விஜயராமன் (65), தமீம்அன்சாரி (35), மன்சூர் (40), முகமது ரபீக் உள்பட 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்