மும்பையில் சுட்டெரித்த கோடை வெயில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் திரண்டனர்

மும்பையில் நேற்று கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் பூங்காக்களில் திரண்டனர்.

Update: 2018-05-06 23:44 GMT
மும்பை,

மும்பையில் கோடை வெயில் மார்ச் மாதம் முதல் சுட்டெரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் உச்சி வெயில் மும்பைவாசிகளை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.

ரெயில் நிலையங்களில் லெமன், ஆரஞ்சு, கரும்புச்சாறு, ரோஸ்மில்க் உள்ளிட்டவற்றை பயணிகள் வாங்கி பருகுகிறார்கள்.

கடும் வெயிலின் காரணமாக தர்பூசணி, வெள்ளரியின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.

நேற்றும் காலை முதலே சூரியன் சுட்டெரித்தது. மதிய வெயில் மண்டையை பிளந்தது.

இதேபோல தானே, நவிமும்பை, புனே உள்ளிட்ட மராட்டியத்தின் மற்ற பகுதிகளிலும் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மும்பையில் மாலை நேரத்தில் காற்று வாங்குவதற்காக பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

தாதர் சிவாஜி பார்க், ஜூகு, கிர்காவ் கடற்கரைகளில் அதிகளவில் மக்கள் திரண்டிருந்தனர். பலர் சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக கடலில் குதித்து உற்சாகமாக குளியல் போட்டனர்.

காற்று வாங்குவதற்காக பூங்காக்களிலும் மக்கள் அதிகளவில் திரண்டு இருந்ததை காண முடிந்தது. 

மேலும் செய்திகள்