ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 1-ந் தேதி தொடக்கம்: கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற ஜூன் 1-ந் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-05-18 23:30 GMT
நாமக்கல்,

ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டினை மேம்படுத்திட கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் ஜூன் 1-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தடகள போட்டிகள் (ஆண், பெண் இருபாலருக்கும்), 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கையுந்து பந்து போட்டி, கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடத்தை பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் வகையில் 2 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், கிராம ஊராட்சியில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய அனைவருக்கும் இப்போட்டிகளில் முழுமையாக பங்கேற்க செய்யவும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி போட்டிகள் நடத்திடவும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

கிராமத்தில் உள்ள பள்ளி விளையாட்டு திடல், சமுதாயக்கூட வளாகம் அல்லது பொதுத் திடலில் போட்டிகளை அந்தந்த கிராமத்தில் வசதிக்கு ஏற்ப நடத்திட வேண்டும். அந்த கிராமத்தை சார்ந்த உடற்கல்வி துறை ஆசிரியர்களின் உதவியுடன் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒரு கிராமத்தில் குடியிருப்பவர், பங்கேற்பவர் வேறு கிராமத்தில் இதே போட்டிகளில் பங்கேற்க கூடாது. கிராம ஊராட்சி அளவிலான போட்டிகள் 3 நாட்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பெரியகருப்பன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறை, வளர்ச்சி துறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்