ரூ.7¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்

கொடைக்கானலில் கோடைவிழா-மலர் கண்காட்சி தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்து, ரூ.7¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Update: 2018-05-19 00:31 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா மலர் கண்காட்சியுடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி, அங்கு 1 லட்சம் மலர்கள் மற்றும் காய்கறிகளால் ஆன உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நடன மங்கைகள், ஜல்லிக்கட்டு காளை, தாஜ்மகால், மாட்டுவண்டி, யானை, முதலை, மயில், நாதஸ்வரம் இசைக்கும் கலைஞர், வெள்ளிநீர்வீழ்ச்சி போன்றவை அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மலர் தொட்டிகள், மலர் அலங்கார வாயில்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் நேற்று அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மலர் கண்காட்சி இன்றும், நாளையும், இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இன்று காலை 11 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பில், 3 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

முன்னதாக கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10 கோடியே 85 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டம் மற்றும் ரோஜா தோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

இதேபோல வேளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் உள்பட ரூ.24 கோடியே 45 லட்சம் மதிப்பிலான 8 முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பிலான 2 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேளாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் டி.ஜி.வினய் உள்பட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்