சிறிய பால்பண்ணை அமைக்க மானியம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய பால்பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-05-19 20:45 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய பால்பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

பால்பண்ணை

தமிழக அரசால் நடப்பாண்டில் வியாபார அளவிலான பால்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 100 சிறிய பால்பண்ணைகள் அமைத்திடும் திட்டத்திற்கான நிர்வாக அனுமதி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. பண்ணை ஒன்றுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் 25 சதவீதமான ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சிறிய பால்பண்ணைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய பால் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் கொட்டகை அமைப்பதற்கு 300 சதுரஅடியில் சொந்த நிலமுள்ளவராகவும், தீவனப்பயிர்கள் பயிர் செய்திட ஏதுவாக பாசன வசதியுள்ள ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ வைத்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பதாரர்கள் தற்போது சொந்தமாக பசுக்கள் மற்றும் எருமைகள் வைத்திருத்தல் கூடாது. மேலும் ஊராட்சி பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த பால்பண்ணை அமைக்க விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், பாலினம், இனம், வயது, முகவரி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பத்தை தங்களது பகுதி கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் வழங்க வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும், முகவரி மற்றும் ஆளறிதல் சான்றிதழும், சொந்த நிலத்திற்கான சான்றும், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 30–ந்தேதி ஆகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்