ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 1–ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி அணையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2018-05-19 22:15 GMT
ஈரோடு,

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் கொடிவேரி அணையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றால அருவியைவிட கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காக பொதுப்பணித்துறை மூலம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அணையில் குளித்து விட்டு வருபவர்களுக்கு உடைமாற்ற 10 அறைகளும், கழிப்பிட வசதியும் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவுமுறை மாறும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆகவே, சத்தான கலப்படமில்லாத உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஏற்கனவே அரசு அறிவித்தபடி ஜூன் 1–ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1, 6, 9, 11–ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு மல்டி கலரில் அச்சிடப்பட்டுள்ளது. புத்தகங்களைப் பார்த்தாலே மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் வகையில் உள்ளது. ஜூன் மாதம் 4 சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வருகிற 23–ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சரிடம் நிருபர்கள், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வில் 29 பேர் தேர்ச்சி பெறவில்லை‘ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘அங்கு பெரும்பாலான மாணவர்கள் தெலுங்கு பேசுபவர்களாக உள்ளனர். ஆகவே, அந்த பள்ளிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தெலுங்கு படித்தவர்களை முன்னுரிமை கொடுத்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் தேர்ச்சி விகிதம் வருங்காலத்தில் அதிகரிக்கும்‘ என்றார்.

அப்போது நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பிசுப்பிரமணியம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கந்தவேல்முருகன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் காளியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்