போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சட்டசபையை முற்றுகையிடுவோம்

போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சட்டசபையை முற்றுகையிடுவோம் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

Update: 2018-05-19 22:45 GMT

புதுச்சேரி,

மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து கோடி கோடியாக மோசடி செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத நிலை இருந்து வருகிறது. இதற்காக பா.ஜ.க. சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.

புதுச்சேரி காவல்துறையை தனது கையில் வைத்துள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் காங்கிரசின் பங்கு இருப்பது வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையை தவறாக வழிநடத்தி வருகிறார்.

இந்த மோசடியில் பா.ஜ.க.வும் சம்பந்தப்பட்டு இருப்பதாக பொய்யான தகவல்களை காங்கிரஸ் கட்சியினர் பரப்பி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் உண்மை இருந்தால் யார் வேண்டுமானாலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியமான காங்கிரஸ் பிரமுகரை தப்பிக்க வைப்பதற்காக இதை விசாரித்த சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் முழுவிவர பட்டியலை காவல்துறை உடனடியாக வெளியிட வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

பா.ஜ.க.வினர் மீது பொய்யான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வருபவர்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும். இந்த வழக்கில் புதுச்சேரியில் உள்ளவர்கள் மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டு உள்ளனர். புதுவை சி.ஐ.டி. போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்