திருச்சியில் அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-19 23:00 GMT
திருச்சி,

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறநிலையத்துறையின் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் பிரசாரத்தை கண்டித்தும், அறநிலையத்துறையின் பணியை விளக்கியும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு திருக்கோவில் நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் லெட்சுமணன், முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்க இணை பொதுச்செயலாளர் சுதர்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பாரதி விளக்கி பேசினார். இதில் மகாலிங்கம், ரவி, அன்பழகன், ஜெய்கிஷன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பாரதி நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 35 ஆயிரத்து 600 திருக்கோவில்களில் வருவாய் உள்ள கோவில்களுக்கு 600 பேர் செயல் அலுவலர்களாகவும், வருவாய் இல்லாத கோவில்களுக்கு 206 ஆய்வாளர்கள் கோவில் தக்கார்களாகவும் உள்ளனர். மொத்த பணியிடங்களில் 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ளன. கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், எழுத்தர்கள், கணக்கர்கள், அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்டோர் அன்றாட கூலிகளாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லை. சமீப காலமாக இந்த துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சிலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அறநிலையத்துறையை வெளியேற்றி விட்டு ஆன்மிகவாதிகளிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். இது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த தர்ணா போராட்டம் நடக்கிறது” என்றார். 

மேலும் செய்திகள்