மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல்-டீசல் விலை தினம், தினம் உயர்ந்து வருகிறது

மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல்-டீசல் விலை தினம், தினம் உயர்ந்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-05-19 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கம்பன்குடி ஆர்ச்சில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கோவிந்தராஜ், துணைச்செயலாளர் ரீகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், நான் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவன். டீக்கடை நடத்திய சாதாரணமானவன். நான் பொறுப்புக்கு வந்தால் எளிய மக்களின் வலியை உணர்ந்து நடப்பேன். அயல்நாட்டில் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை 100 நாட்களில் மீட்டு இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் மோடி.

ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எதுவுமே நடக்கவில்லை. மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் உயர்ந்து வருகிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஜனநாயக அமைப்பு. ஆனால் பிரதமர் மோடி அரசு சொல்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. குறுகிய அரசியல் லாபத்திற்காக கர்நாடக மாநிலத்தில் மத்திய அரசு தான் விரும்பிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கவர்னர் மூலம் நடந்தேறிய தவறுகளால் தலைகுனிந்து நிற்கிறது.

பல மதங்களை கொண்ட நாடு பல மொழிகள் பேசப் படும் நாடு இந்தியா. மோடி ஆட்சியில் மதம், சாதி, மொழி என பிளவுபடுத்துகிறார்கள். தேச ஒற்றுமை, ஒருமைபாடு பாதுகாக்கப்பட வேண்டும். மதசார்பற்ற கொள்கை காப்பாற்றப்பட வேண்டும். இதற்காகத்தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. எனவே எங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேசியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் அருணாசலம், அம்புஜம், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்