பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,886 பேர் மீது வழக்குப்பதிவு

குமரி துறைமுக திட்டத்துக்கு எதிராக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,886 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-05-20 22:15 GMT
நாகர்கோவில்,

பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போலீஸ் தடையை மீறி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்றுமுன்தினம் மறியல் போராட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ், ஆஸ்டின், மனோதங்கராஜ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 220 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் மீனவர்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

1,886 பேர் மீது வழக்குப்பதிவு

போலீஸ் தடையை மீறி கலெக்டர் அலுவலக சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 220 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் போலீஸ் அனுமதியின்றி மேலமணக்குடி பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 115 பேர், கீழ மணக்குடி சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 103 பேர், சங்குத்துறை கடற்கரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 114 பேர், ராஜாக்கமங்கலம் துறையில் போராட்டம் நடத்திய 350 பேர், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலை பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 179 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற மொத்தம் 1,886 பேர் மீதும் அந்தந்த சரக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்