கன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்: விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

கோடை விடுமுறையை கொண்டாட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் நேற்று குவிந்தனர். கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு கூட்டம் அலைமோதியது. இதுபோல் திற்பரப்பு அருவியில் ஏராளமானார் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2018-05-20 23:00 GMT
நாகர்கோவில்,

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும், அதன் அருகே உள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்க படகின் மூலம் செல்கிறார்கள். அதுவும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரியில் கூட்டம் அலைமோதும்.

கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் இருந்து வருகிறது. அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் காலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்ததுடன், கடலிலும் குளித்து மகிழ்ந்தனர். கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படகுதுறையின் வெளியே ரதவீதி வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில், படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க காத்திருந்தனர். இதுபோல், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குமரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். எனவே அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்வதால் திற்பரப்பு பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது.

திற்பரப்பு அருவியில் நேற்று விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அனைவரும் அருவியில் ஆனந்தமாக குளித்தனர். சிறுவர்-சிறுமிகள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள தடுப்பணையில் பலர் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிபாலத்தையும் ஏராளமானவர்கள் பார்வையிட்டனர். அவர்கள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதி வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

இதுபோல், பத்மநாபபுரம் அரண்மனை, சொத்தவிளை பீச், குளச்சல் கடற்கரை போன்ற இடங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்