தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் பாறாங்கல்லை போட்டு படுகொலை

அறந்தாங்கி அருகே தூங்கி கொண்டிருந்த வாலிபர் பாறாங்கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-05-20 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு எந்த வேலையும் பார்க்காமல் வீட்டில் இருந்து வந்தார். அவரது குடும்பமும், அவரது சித்தப்பா பழனியப்பன் குடும்பமும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். வீரபத்திரன் இரவு நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள ரகுபதி என்பவருக்கு சொந்தமான குடிசையில் தங்கி வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய வீரபத்திரன் பலருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் வீரபத்திரன் சாப்பிட்டு விட்டு, குடிசையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று காலை பழனியப்பன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீரபத்திரன் பாறாங்கல்லால் தாக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தெட்சிணாமூர்த்தி தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அறந்தாங்கி பாலமுருகன், ஆவுடையார்கோவில் முத்துக்கண்ணு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சாமிக்கண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜூவும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டது. அது வீரபத்திரனின் உடலை மோப்பம் பிடித்த பின் ஓடிச்சென்று அப்பகுதியில் உள்ள சிறிய குளத்தை சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வாலிபர் ஒருவர் பாறாங்கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்