திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

திருச்சியில் உறவினர் வீட்டுக்கு வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-05-20 23:00 GMT
ஜீயபுரம்,

கோவை பாலமுருகன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மகன் வெங்கடேஷ்(வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையையொட்டி வெங்கடேஷ், தனது தம்பி கார்த்திக்(15) உடன் திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வெங்கடேஷ், கார்த்திக், அவர்களுடைய சித்தி மகன் விஷ்ணு(17) ஆகியோர் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்து சுற்றிப்பார்த்தனர். அப்போது காவிரி ஆற்றில் குளிக்க ஆசைப்பட்டு 3 பேரும் ஆற்றுக்குள் இறங்கினர்.

இதில் வெங்கடேஷ் குறைந்த அளவில் தான் தண்ணீர் கிடக்கிறது என்று எண்ணி ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது, அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த கார்த்திக், விஷ்ணு ஆகியோர் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் வெங்கடேஷ் தண்ணீருக்குள் மூழ்கினார்.

இதனையடுத்து அவர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர். சிறிது நேரத்திற்கு பின்னர் வெங்கடேஷ் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் இதே இடத்தில் அரியலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை என்பதால் தற்போது முக்கொம்புக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றுக்குள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அந்த பகுதியில் குளிப்பதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்