சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிவாசி மக்கள்

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-05-23 22:45 GMT
கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பனியர், குரும்பர், பெட்ட குரும்பர், காட்டு நாயக்கர் என ஆதிவாசி மக்கள் பல ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட வில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க சாதி சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினர். இது சம்பந்தமாக வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட காஞ்சிக்கொல்லி, செம்பக்கொல்லி, மேலம்பலம், மாக்கமூலா, கோடமூலா, கடசனக்கொல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆதிவாசி மக்கள் பிரதிநிதிகள் சுரேஷ், கதிரவன், பொம்மன், மான்பன் மற்றும் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் ஆர்.டி.ஓ. முருகையன் மற்றும் தாசில்தார் ரவி ஆகியோரை சந்தித்து கோரிக்கை குறித்து முறையிட்டனர். அப்போது கடந்த ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பித்தும் இதுவரை சாதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வருவதாக குற்றம் சாட்டினர். அதை கேட்டறிந்த அதிகாரிகள், உங்களது கோரிக்கை குறித்து விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருகிற 31-ந் தேதிக்குள் சாதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த ஆதிவாசி மக்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், குறித்த தேதிக்குள் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை எனில் மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவோம் மற்றும் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்தும் ஆலோசிப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்