தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம்: மோடி, எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மைகள் எரிப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

Update: 2018-05-23 23:30 GMT
புதுச்சேரி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழக காவல்துறையினர் நேற்று முன்தினமும், நேற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் புதுவையில் நேற்று பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் மத்திய, தமிழக அரசுகளை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் அருகில் தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கழக தலைவர் வீர.மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப் பினர். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவபொம்மைகளை தீ வைத்து கொளுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீர் வாங்கி ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழர் அதிகாரம் அமைப்பினர் நேற்று மதியம் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு அமைப்பின் மாநில தலைவர் முகமது மீரான் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர்கள் கண்ணதாசன், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் புதுவையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட தயாராக இருந்த ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புஸ்சி வீதியில் சின்ன மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் தந்தை பிரியன், செயலாளர் விஜயசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திடீரென அங்கு அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிட வில்லை. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வன், பிரபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் சுப்பையா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் லெனின் துரை தலைமை தாங்கினார்.

புதுச்சேரி ஜல்லிக்கட்டு ஒழுங்கிணைப்பு குழு சார்பில் மறைமலையடிகள் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

அதேபோல் புதுவை மகாத்மா காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி அருகே புதுச்சேரி தமிழ் தேசிய பேரியக்கத்தினர் அதன் செயலாளர் வேல்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உலக தமிழ் கழக அமைப்பாளர் தமிழ் உலகன், தமிழர் களம் அமைப்பாளர் அழகர், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சங்க மாவட்ட தலைவர் சங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்