திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 7-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

Update: 2018-05-23 23:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் 135 அரசு பள்ளிகள், 12 நகராட்சி பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், 21 சுய நிதி பள்ளிகள், 147 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 336 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 987 மாணவர்கள், 14 ஆயிரத்து 227 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 214 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு நேற்று வெளியானது.

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி வெளியிட்டார்.

இதில் 13 ஆயிரத்து 486 மாணவர்கள், 13 ஆயிரத்து 932 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 418 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 96.42 சதவீதமும், மாணவிகள் 97.93 சதவீதமும் என மொத்தம் 97.18 சதவீதம் பேர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் 97.06 சதவீதமாக இருந்தது. இது மாநில அளவில் 7-வது இடமாகும். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 7-வது இடத்தை பெற்றிருந்தது. இந்த ஆண்டு அந்த இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.12 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 842 பேர் தேர்வு எழுதியதில் 27 ஆயிரத்து 995 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 28 ஆயிரத்து 214 பேர் தேர்வு எழுதி அதில் 27 ஆயிரத்து 418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதத்தில் மாணவிகள் முன்னிலை பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்