இருக்கைகள் இல்லாத சாத்தூர் பஸ் நிலையம் பயணிகள் அவதி
சாத்தூர் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லாததால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.;
சாத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் சாத்தூரும் ஒன்று. இந்நகரம் நான்கு வழிச்சாலையில் உள்ளதால், ஏராளமான பஸ், கார்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் தொழில் நகரம் என்பதால் பொருட்கள் வாங்குவதற்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, நெல்லை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் தினசரி வியாபாரம் தொடர்பாக வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பல வியாபாரிகள் பஸ்களில் வருகின்றனர். இதுதவிர சாத்தூர் அருகில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் சாத்தூர் வந்து, பின்னர் அங்கிருந்து கோவிலுக்கு செல்கின்றனர். வெளியூர் மட்டுமின்றி இருந்தும் உள்ளூர் பொதுமக்களும் சாத்தூர் வந்து செல்கின்றனர்.
மேலும் அருப்புக்கோட்டை, சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான கிராமப் பகுதிகளுக்கு சாத்தூரில் இருந்து பஸ்கள் செல்கின்றன.
இந்தநிலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் சாத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. இதனால் பொதுமக்கள் தரையில் அமரும் நிலை உள்ளது. இத்துடன் பல பயணிகள் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பு மக்களும் இருக்கைகள் இன்றி அவதியடைந்து வருகின்றனர். பஸ் நிலைய பிளாட்பாரங்களில் பயணிகள் அமருவதால் பஸ்கள் முன்னும், பின்னும் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாத்தூர் பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.