தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து சமூக சேவகி மேதா பட்கர் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சமூக சேவகி மேதாபட்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2018-06-18 22:37 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக சமூக சேவகி மேதா பட்கர் நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கிருந்து துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகர் வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வசேகர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் அவர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கலவரத்தால் ஒரு கால் இழந்த பிரின்ஸ்டன் என்பவரிடம் கலவரம் தொடர்பாகவும், சிகிச்சை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

மாலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சுனோலின், ஜான்சி ஆகியோரது வீடுகளுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக மேதாபட்கர், தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானம் அற்றது. இது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்தி வருகிறது. மோடி அரசு மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மக்கள் பிரச்சினையை ஓரளவுக்காவது எடுத்து சொல்ல முடிந்தது. தற்போது உள்ள அரசு மக்களின் பிரச்சினையை அறிய முயற்சிப்பதே இல்லை.

வேதாந்தா நிறுவனம் மக்களின் ஆதரவை இழந்து வருகிறது. எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றவே அரசுகள் உதவி செய்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்து அவர்கள் மீது அடக்கு முறையை அரசு கையாளுகிறது.

இதன்மூலம் மக்களை வன்முறைக்கு அரசுதான் தூண்டி விடுகிறது. அதேபோல் மக்களை சமூக விரோதிகள் என்று கூறி கைது செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு மேதாபட்கர் கூறினார்.

மேலும் செய்திகள்