குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.

Update: 2018-06-30 23:00 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விஜயகுமார் எம்.பி., கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றினை கண்காணித்திடவும், திட்டங்கள் ஊரக மக்களை சென்றடைகின்றதா? அனைத்தும் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படுகின்றதா, என்பதை உறுதிபடுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டங்களை நடத்தி குறைகளை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், தீன் தயாள் அந்த்யோதியா யோஜனா, தேசிய கிராம குடிநீர் திட்டம், தேசிய சமூக உதவி திட்டம், தேசிய சுகாதார இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மதிய உணவு திட்டம் உள்பட மத்திய அரசு ஊரக வளர்ச்சிக்காக செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிச்சை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்