சேலம் சரகத்தில் ரூ.1,080 கோடி வருமான வரி வசூல் - கூடுதல் ஆணையாளர் லட்சுமிநாராயணன் தகவல்

சேலம் சரகத்தில் இந்த ஆண்டு ரூ.1,080 கோடி வருமான வரி வசூல் ஆகி உள்ளது என்று கூடுதல் ஆணையாளர் லட்சுமிநாராயணன் கூறினார்.

Update: 2018-06-30 22:47 GMT
சேலம்,

சேலம் சரக வருமான வரித்துறை மற்றும் பட்டய கணக்காளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து வருமான வரிச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் சேலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு சேலம் சரக வருமான வரித்துறை இணை ஆணையர் சுரேஷ்ராவ் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் ஆணையாளர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 2015-16-ம் ஆண்டு ரூ.490 கோடி தான் வருமான வரி வசூல் ஆனது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2017-18-ம் ஆண்டில் சேலம் சரகத்தில் வருமான வரி வசூல் ரூ.1,080 கோடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி இந்தியாவிலேயே சேலம் சரகத்தில் தான் அதிகம் வருமான வரி வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சேலம் சரக வருமான வரித்துறை அதிகாரிகள் சுனில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வருமான வரித்துறையில் புதிய சட்டங்கள் பற்றி விளக்கம் அளித்து பேசினர். இந்த கருத்தரங்கில் சேலம் மாவட்ட வணிகர்கள் சங்க பேரவை தலைவர் ஜெயசீலன், பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் கிருஷ்ணன் உள்பட வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்