குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-07-17 22:45 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வானதிராயன்பட்டி ஊராட்சியை சேர்ந்த செவனம்பட்டி, நடுப்பட்டி, நரியக்கோண்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செவனம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக நடுப்பட்டி மற்றும் நரியகோண்பட்டி ஆகிய ஊர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன் படுத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நடுப்பட்டி மற்றும் நரியக்கோண்பட்டி ஊர்பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை செக்போஸ்ட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்