தூத்துக்குடி அருகே காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் மீட்பு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தூத்துக்குடி அருகே காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-07-19 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழில் அதிபர்

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்கூட்டுடன்காடு மேலத்தெருவை சேர்ந்தவர் உப்புலிங்கம். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (வயது 46), தொழில் அதிபர். இவருடைய மனைவி சங்கரம்மாள் (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முத்துகிருஷ்ணன், புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணனிடம் முத்துகிருஷ்ணன் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். இந்த கடனை திருப்பித்தருமாறு கிருஷ்ணன் பலமுறை கேட்டு வந்தார். ஆனால், முத்துகிருஷ்ணன் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலையில் முத்துகிருஷ்ணன், அவருடைய சொந்த ஊரான கே.பி.தளவாய்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அல்லிகுளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவரை 2 கார்களில் வந்த கிருஷ்ணன், கனி மற்றும் 5 பேர் வழிமறித்தனர். பின்னர் அவரை காரில் கடத்திச்சென்றனர்.

காயங்களுடன் மீட்பு

இதுகுறித்து சங்கரம்மாள் புதுக்கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். போலீஸ் தேடுவதை அறிந்த கிருஷ்ணன், கனி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு முத்துகிருஷ்ணனை தெய்வச்செயல்புரம் ரோடு காட்டு பகுதியில் காரில் வந்து இறக்கி விட்டுவிட்டு சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர். அப்போது அவரது முகம் உள்பட உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் போலீசார் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக முத்துகிருஷ்ணன் தன்னிடம் இருந்த இடத்தை கொடுக்க இருந்தார். ஆனால், அந்த இடத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருப்பதால் கடைசி நேரத்தில் இடத்தை கிருஷ்ணனிடம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், கனி உள்ளிட்டோர் முத்துகிருஷ்ணனை காரில் கடத்தியதும், பின்னர் அவரை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன், கனி உள்ளிட்ட 7 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முத்துகிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்