சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-07-19 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தேர்வுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்யும், மாவட்ட அளவிலான முதல் தேர்வுக் குழு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, கடன் உதவி கேட்டு விண்ணப்பம் செய்த நபர்களிடம், சுய தொழில் தொடங்குவது தொடர்பாக, கலந்துரையாடி, வங்கிகளுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர் அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டிற்கு 89 விதமான தொழில்கள் தொடங்க ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடன்பெற விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் மூலம் பெறப்பட்ட 73 விண்ணப்பங்கள், மதுரை கதர் கிராமத் தொழில் ஆணையம் மூலம் பெறப்பட்ட 63 விண்ணப்பங்கள் மற்றும் நெல்லை கதர் கிராமத் தொழில்கள் வாரியம், மூலம் பெறப்பட்ட 73 விண்ணப்பங்கள் என மொத்தம் 209 விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய விண்ணப்பங்களை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

மேலும், கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தொழில் முனைவோர் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் விஜயகுமார், மத்திய அரசு குறு, சிறு தொழில் நிறுவன உதவி இயக்குனர் ஜெரினாபப்பி மற்றும் வங்கி மேலாளர்கள், காதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் காதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்