ஈரோட்டில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்

தமிழக பொன்விழா ஆண்டையொட்டி ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியை கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-19 22:30 GMT
ஈரோடு,

தமிழகம் “தமிழ்நாடு“ என பெயர் சூட்டப்பட்டு 50-ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) நோயிலின் ஜான் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 21 வயதிற்கு உட்பட்ட ஏராளமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3-ம் பரிசாக ரூ.1,000-ம் வழங்கப்பட உள்ளது.

மேலும் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்ளவார்கள்

மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பெறுபவர் களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கமும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கமும் வழங்கப்படும்.

இந்த பரிசுத்தொகை மற்றும் தங்கப்பதக்கத்தை தமிழக முதல் -அமைச்சர், வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்க உள்ளார்.

மேலும் செய்திகள்