விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை கையிருப்பு உள்ளது அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை கையிருப்பு உள்ளதாக அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Update: 2018-07-19 23:00 GMT
கபிஸ்தலம்,

பாபநாசம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கபிஸ்தலம், பட்டீஸ்வரம், மெலட்டூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் கர்ப்பிணிகளை பரிசோதனை செய்வதற்கான நவீன ஸ்கேன் கருவியை வழங்கும் நிகழ்ச்சி கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சுகாதார துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம்குமார், ராமநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோபிநாதன், சூரியநாராயணன், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், அரசு வக்கீல் அறிவழகன், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, சபேசன், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் துரைக்கண்ணு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நவீன ஸ்கேன் கருவிகள், மாணவ-மாணவிகள் 5,815 பேருக்கு மூக்கு கண்ணாடிகள், கர்ப்பிணிகள் 8 பேருக்கு உதவித்தொகையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுப்பதற்கு வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. இதில் உள்ள சிரமத்தை போக்க கபிஸ்தலம், பட்டிஸ்வரம், மெலட்டூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக நவீன ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.115 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கி சாதனை படைத்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும், தமிழக மக்களின் நலனுக்காக நாள்தோறும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை உள்ளிட்ட வேளாண்மை இடுபொருட்கள் அனைத்தும் கையிருப்பு உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்தி சாகுபடி பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதார துறை துணை இயக்குனர் ரவீந்திரன், தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் குமார், முத்து, முருகன், சின்னப்பா, செல்வம், வக்கீல் சரவணன், முன்னாள் கவுன்சிலர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அதிகாரி நவீன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்