திண்டுக்கல் கோர்ட்டில் ஜான்பாண்டியன் ஆஜர்

அனுமதியின்றி சிலை வைத்த வழக்கில் நேற்று திண்டுக்கல் கோர்ட்டில் ஜான்பாண்டியன் ஆஜர் ஆனார். அப்போது 21 பேர் சாட்சியம் அளித்தனர்.

Update: 2018-07-19 22:59 GMT
திண்டுக்கல்,


திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியில், கடந்த 1993-ம் ஆண்டு சிலர் வீரர் சுந்தரலிங்கனார் சிலையை வைத்தனர். அனுமதியின்றி சிலை வைத்ததாக கூறி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து அதனை அகற்றினர். அப்போது, சிலை வைத்தவர் களுக்கும், போலீசாருக் கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை தூண்டிவிட்டதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், தன் மீதான வழக்கை தனியாக விசாரிக்க வேண்டும் என்று ஜான்பாண்டியன் மனு தாக்கல் செய்ததை அடுத்து, ஜான்பாண்டியன் மீதான வழக்கு திண்டுக்கல் மாவட்ட சப்-கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஜான்பாண்டியன் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் நேற்று 21 பேர் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இன்னும் அரசு தரப்பில் 7 பேர் சாட்சியம் அளிக்க உள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி தீபா உத்தரவிட்டார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், சிலை வைத்த வழக்கில் என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 25 ஆண்டுகளாக நான் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி வருகிறேன், என்றார். கோர்ட்டில் ஜான்பாண்டியன் ஆஜரானதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்