ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிப்பு எந்திரம் இருந்தும் குடிநீர் இல்லை; கட்டிடங்களும் பழுது

ஆரணியில் கல்வி மாவட்ட அலுவலகம் செயல்படும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. சுத்திகரிப்பு எந்திரம் அமைத்தும் தண்ணீர் இல்லாததால் அந்த எந்திரமும் பயன்பாடின்றி கிடக்கிறது.

Update: 2018-07-30 23:38 GMT
ஆரணி,

ஆரணியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளியாகும். இந்த பள்ளியில் படித்தவர்கள் பலர் உயர்நிலைக்கு சென்றுள்ளனர். ஆரம்பத்தில் குதிரை லாயத்தில் இந்த பள்ளி செயல்பட்டு வந்துள்ளது. தற்போது இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 440 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் இதற்கு முன்பு வரை செயல்பட்ட ஆரணி தாலுகா பள்ளிகள் இப்போது ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. தற்காலிக கல்வி மாவட்ட அலுவலகமாக ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியே செயல்பட்டு வருகிறது.

கல்வி மாவட்ட அதிகாரிக்கு இங்குள்ள அறையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை சந்திப்பதற்காக கல்வி மாவட்டத்தில் உள்ள ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், தெள்ளார் வட்டாரங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் தினமும் வருகின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் இதே பள்ளியில் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த பள்ளியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த பாபுமுருகவேல் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மாணவர்களின் நலனுக்காக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் தண்ணீர் இல்லாததால் அந்த எந்திரம் பயனற்று கிடக்கிறது.

மேலும் கழிப்பறைகளும் இல்லை. 5 வகுப்பறை கட்டிடங்களும் பழுது ஏற்பட்டு பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த கட்டிடங்களை மாற்றியமைத்து பயிற்சி கூடங்கள் ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள்அமைத்து தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் உடனடியாக தலையிட்டு குடிநீர் வசதியும், கழிப்பறை வசதிகளும், பயிற்சி கூடங்களும் அமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
Tags:    
Show comments

மேலும் செய்திகள்