கோவில் சிலை செய்ததில் முறைகேடு வழக்கு: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் நேரில் ஆஜர்

பழனி முருகன் கோவில் சிலை செய்ததில் நடந்த முறைகேடு வழக்கு தொடர்பாக இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் நேற்று திருச்சியில் உள்ள சிலை கடத்தல் பிரிவு திருச்சி முகாம் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் போலீஸ் அதிகாரி 1½ மணிநேரம் விசாரணை நடத்தினார்.

Update: 2018-07-31 23:00 GMT
திருச்சி,


பழனி தண்டாயுதபாணி(முருகன்) கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணத்தால் ஆன சிலைதான் பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையாக இருந்தது. இந்த நவபாஷாண சிலை பழுதடைந்து விட்டதால் 2003–04–ம் ஆண்டு புதிய முருகன் மூலவர்சிலை வடிவமைக்க திட்டமிடப்பட்டது. அரசு தரப்பில் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்திடம் இருந்து 10 கிலோ தங்கம் பெறப்பட்டு, 200 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன சிலை உருவாக்கிதர, கும்பகோணத்தில் உள்ள அரசு சிற்பியான ஸ்தபதி முத்தையாவிடம், அப்போதைய முருகன் கோவில் செயல் அலுவலரான ராஜா மூலம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் கூட்டு சதி செய்து முறையான ஐம்பொன் சிலை செய்யாமல் அதிக அளவில் செம்பு கலந்து வெள்ளி முலாம் எதுவும் பூசப்படாமல் கூடுதலாக 21 கிலோ எடையில் மொத்தம் 221 கிலோ எடையில் சிலை செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது.


அதே வேளையில் பழைய நவப்பாஷாண மூலவர் சிலை, கோவிலின் ஒரு அறையில் போட்டு மூடப்பட்டது. இந்த சிலை செய்ததில் 4½ கிலோ தங்கம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் சென்றன.

இந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலுக்கு நேரடியாக சென்று அவர் விசாரணை நடத்தினார். அப்போது 2004–ம் ஆண்டு முதல் தற்போதுவரை காணிக்கையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் பக்தர்கள் வழங்கிய நன்கொடை கணக்கிடப்பட்டது. பழனி முருகன் கோவிலுக்கே ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு தங்கம் கிடைக்கும்போது, திருத்தணி கோவில் நிர்வாகத்திடம் சிலை செய்யும் பணிக்கு தங்கம் பெற வேண்டிய அவசியம் என்ன? என சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பழைய நவபாஷாண சிலையை வெளிநாட்டில் விற்கும் திட்டமும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸ்தபதி முத்தையா, ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் வெளியே உள்ளனர்.


இதற்கிடையில் பழனி முருகன் சிலை முறைகேடு தொடர்பாக, அப்போது இந்து அறநிலையத்துறை ஆணையராக பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்ற தனபால் விசாரணைக்கு ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் அறிவிப்பும் செய்யப்பட்டது. பின்னர் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில் முன்னாள் ஆணையர் தனபால், மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன்கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஐகோர்ட்டு நீதிபதி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி, ஜாமீன் பெற உத்தரவிட்டார். கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரான தனபாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர், கும்பகோணத்தில் தங்கி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் தனபாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


அதன்பேரில் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. சிறப்பு முகாம் அலுவலகத்தில் முன்னாள் ஆணையர் தனபால் நேற்று காலை 10.45 மணிக்கு ஆஜரானார். அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், அவரிடம் பழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த முறைகேடு குறித்து கேள்விகள் கேட்டு அவற்றை பதிவு செய்தார். 1½ மணி நேர விசாரணைக்கு பின்னர், மதியம் 12.15 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

தனபாலை சூழ்ந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். வேறு எதுவும் சொல்வதற்கில்லை’’ என பதில் அளித்து விட்டு காரில் ஏறி கும்பகோணம் புறப்பட்டு சென்றார். விசாரணை நடத்திய அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமனிடம் கேட்டபோது, ‘‘என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’’ என கூறிவிட்டு அவரும் வெளியே வேகமாக கிளம்பி சென்று விட்டார்.

மேலும் செய்திகள்