மாணவன் தூக்குப்போட்டு இறந்த சம்பவம்: 3 ஆசிரியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

க.பரமத்தியில் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 3 ஆசிரியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-31 23:15 GMT
க.பரமத்தி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி பெரியார்நகரை சேர்ந்தவர் சுரேஷ். அரசு பஸ் டிரைவர். இவருடைய மகன் அருள்பிரகாசம்(வயது 12) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற அருள்பிரகாசம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மாணவனின் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில், எனது சாவுக்கு காரணம் என எழுதப்பட்டு சில ஆசிரியர்கள் குறித்த விவரம் இடம்பெற்றிருந்தது. இதற்கிடையே அந்த மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனது மகனை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனம் புண்படும்படி ஆசிரியர்கள் திட்டியிருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுரேஷ் தெரிவித்தார். அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட உறவினர்கள் அருள்பிரகாசத்தின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அருள்பிரகாசத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையொட்டி பிரேத பரிசோதனை கூடம் முன்பாக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மதியம் 1.30 மணியளவில் மாணவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் கரூர்- வாங்கல் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அருள்பிரகாசத்தின் சாவுக்கு காரணமான அந்த பள்ளி ஆசிரியர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாறாக 174 என்கிற பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்து திசைதிருப்பிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தினர். மேலும் மாணவனின் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுவது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாரதி, பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா உள்பட போலீசார் மற்றும் கரூர் தாசில்தார் கலியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்- வாங்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அருள்பிரகாசத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே அருள்பிரகாசம் படித்து வந்த, க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன், மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கனகராஜ், க.பரமத்தி வட்டார கல்வி அதிகாரிகள் முருகன், செந்தில் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம், உடற்கல்வி ஆசிரியர் ஜெயபாலன், கணித ஆசிரியர் செந்தில் ஆகியோரிடமும், அருள்பிரகாசத்துடன் படித்த மாணவர்களை அழைத்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு ஆசிரியர்கள் ஜெயபாலன், செந்தில் ஆகியோரை வேறு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் துறைரீதியாக நடவடிக்கை எடுத்தார்.

இதற்கிடையே க.பரமத்தி போலீசார் இந்த சம்பவம் குறித்து முதலில் 174 (தன்னிச்சையான தற்கொலை முடிவு) என்கிற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதனை மாற்றம் செய்து மாணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஆசிரியர்கள் ஜெயபாலன், செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து க.பரமத்தி இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்