பொள்ளாச்சி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து

மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க பொள்ளாச்சி வனப்பகுதியில் வனத்துறையினர் மழைக்கால சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2018-07-31 22:15 GMT

பொள்ளாச்சி,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக காய்ந்து கருகி கிடந்த வனப்பகுதி பசுமைக்கு திரும்பி பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடுவது சிரமம். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் வனத்திற்குள் நுழைந்து மரங்களை வெட்டி கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

வனக்குற்றங்களை தடுக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் மாரிமுத்து மேற்பார்வையில் பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் சிறப்பு ரோந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழுவினர் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வில்லோனி, பச்சை தண்ணீர் பீட், மாங்கரை, ஆழியார், நவமலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

மழை பெய்து வருவதால் பசுமை திரும்பி அடர்ந்த வனப்பகுதியாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் மலைவாழ் மக்கள், வனத்துறையினர் நடமாட்டம் குறைவாக இருக்கும். இதை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் வனப்பகுதிகளுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. மேலும் மரம் வெட்டி கடத்தும் கும்பலை கண்காணிக்கவும் மழைக்கால சிறப்பு ரோந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, மலைவாழ் மக்களிடம் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை தவிர யானை, புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்