தமிழகத்தில் முதல்முறையாக பிராமணர் அல்லாதவர் மதுரை கோவிலில் அர்ச்சகராக நியமனம்

தமிழகத்தில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுதான் முதல்முறை என தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-31 23:15 GMT

மதுரை,

கோவில்களில் பிராமணர் அல்லாத இதர சாதியினர் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைதொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த 2006–ம் ஆண்டு முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பிராமணர் இல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சி வகுப்புகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைணவ ஆகம விதிகளின் படியும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் சைவ ஆக விதிகளின் படியும் பயிற்சி பள்ளிகளை 2007–ம் ஆண்டு தமிழக அரசு தொடங்கியது. இந்த பயிற்சியை 206 பேர் நிறைவு செய்தனர்.

இந்த நிலையில் ஆகம விதிகளை மீறினால் அவர்களை உடனே பணி நீக்கம் செய்யலாம் உள்பட சில நிபந்தனைகளுடன் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் மதுரை அழகர்கோவிலை சேர்ந்த உபகோவிலான தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடத்திற்கு தகுதியான இந்து சமயத்தை சேர்ந்த நபர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய உள்ளதாக 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த இடத்திற்கு அர்ச்சகர் பயிற்சி முடித்த மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி என்பவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து மாரிச்சாமியை மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோவிலில் அர்ச்சராக நியமனம் செய்தனர். இவர் கடந்த சில வாரங்களாக அங்கு அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இதைதொடர்ந்து அவர் அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுதான் முதல்முறை என தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்க தலைவர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்