சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-07-31 22:15 GMT
வேலூர், 



வேலூர் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் ரஷீத். அவரது மகன் யூசுப் (வயது 25). இவர், வேலூரில் உள்ள சோடா பாட்டில் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். யூசுப் தனக்கு திருமணமானதை மறைத்து அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி யூசுப் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு வைத்து அவர், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமியின் பெற்றோர் தனது மகள் கடத்தப்பட்டதாக வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் 14-ந் தேதி அதிகாலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு சிறுமியுடன் வந்த யூசுப்பை, போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் யூசுப்புக்கு விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி வேலூர் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார்.

இதையடுத்து பலத்த காவலுடன் யூசுப் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்