ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் பணிச்சுமையை தவிர்க்க வேண்டும்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் பணிச் சுமையை தவிர்க்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2018-08-05 22:45 GMT
கரூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினர். மாநில பொது செயலாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு வரம்பு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்துதல், சாலை ஆய்வாளர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையிலுள்ள பதவி உயர்வினை வழங்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சென்னையில் கடந்த 1-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தது திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தையில் கூறியதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இதனை நிறைவேற்ற இந்த மாத இறுதிக்குள் அரசாணை வெளிவரவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் கடுமையான பணிச்சுமை, பணி அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாவட்ட துணை தலைவர் மனோகரன், அரசு ஊழியர்கள் சங்க கரூர் மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்