கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி. தண்ணீர்: நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது

கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும், தமிழக அரசு நீர் மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

Update: 2018-08-21 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் 150 டி.எம்.சி. அளவுக்கு கடலில் கலந்து வீணாகி உள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் முறையாக நடைபெறாததால் கிளை வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

கடந்த மாதம் (ஜூலை) 13-ந் தேதியே மேட்டூர் அணையை திறந்திருந்தால் ஓரளவுக்கு நீரை சேமித்திருக்கலாம். விலை மதிப்பில்லாத தண்ணீரை கடலில் வீணாக்கி வருகின்றனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இனியாவது மாற்று பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வைகை, காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம், ஆதனூர் கதவணை திட்டம், சுமார் ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டிருந்த காவிரி பாசன மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. காவிரி சமவெளி பகுதி என்பதால் தடுப்பணை கட்ட முடியாது என முதல்-அமைச்சர் சொல்கிறார். பின்னர் ஏன் 62 தடுப்பணைகளை கட்டுவதாக அறிவித்துள்ளார்? அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.

நீர் மேலாண்மை குறித்த புரிதல் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர் நீர் மேலாண்மையில் ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றவரல்ல. காவிரி டெல்டா பற்றி அவருக்கு என்ன தெரியும்?

சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதே போன்ற அணுகுமுறையைத் தான் கடந்த காலங்களில் தமிழக அரசுடன், மத்திய அரசு கையாண்டது. இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது மாநில அரசுகளை மத்திய அரசு சுமையாக கருதுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்