தஞ்சை மாநகரில் புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது

தஞ்சை மாநகரில் இந்த ஆண்டு புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறினார்.

Update: 2018-09-04 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ந்தேதி நடைபெறு கிறது. விநாயகர் சிலை ஊர்வலம் 15-ந்தேதி நடை பெறுகிறது.

இந்த ஊர்வலத்தை வருகிற 15-ந்தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். விநாயகர் சிலை வைக்கும் பொறுப்பாளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கோட்டாட்சியர், இடத்தின் உரிமையாளர், இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை ஆகிய துறைகளில் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.

கடந்தாண்டு சென்ற வழக்கமான பாதையில் இந்தாண்டும் செல்ல வேண்டும். இந்த ஆண்டு புதிதாக வேறு இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது. 20 பேர் கொண்ட சிலைபாதுகாப்பு குழுவின் விபரங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.சிலையுடன் வரும் பூசாரியின் பெயர் விபரம் தர வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து சிலைகளும் ரயிலடிக்கு வந்து, பிறகு காந்திஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், நிக்கல்சன் வங்கி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கொடிமரத்துமூலை வழியாக சென்று கரந்தை வடவாற்றில் கரைக்க வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மது அருந்த கூடாது. சிலைகள் கரைக்கும் இடத்தில் மாநகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராஜகோபால், பா.ஜ.க. நகர தலைவர் விநாயகம், மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ், பொது செயலாளர் உமாபதி, இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவன தலைவர் பழ.சந்தோஷ்குமார், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரபு மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்