தனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்

புதுவை சட்டமன்றத்துக்கு காரில் வந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டார்.

Update: 2018-09-07 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றம் முன் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டமன்றத்துக்கு இருபுறமும் சுமார் 200 தூரத்துக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சட்டமன்றத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை வெகுதொலைவில் நிறுத்திவிட்டு நடந்து சென்று வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மக்களை சந்திப்பதை விட்டுவிட்டு விலகி செல்வதாக குற்றஞ்சாட்டினர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று தனது காரில் சட்டசபைக்கு வந்தார். சட்டமன்றம் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை சட்டமன்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே எம்.எல்.ஏ. இருக்கிறார் என்று அந்த போலீஸ்காரரிடம் கார் டிரைவர் எடுத்துக் கூறினார். ஆனாலும் அந்த போலீஸ்காரர், அரசு கார்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையொட்டி அவர்களுக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் அங்கு அமைச்சர் ஷாஜகான் காரில் வந்தார். அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் நடுரோட்டில் நிற்பதை பார்த்துவிட்டு ஷாஜகான் காரில் இருந்து இறங்கி வந்தார். நிலைமையை அறிந்துகொண்ட அவர் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் எம்.எல்.ஏ.வின் காரை அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகானின் காரும் உள்ளே வந்தது.

சட்டசபைக்கு வந்த அன்பழகன் எம்.எல்.ஏ. நேராக சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரிடம் சென்று இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டசபை பகுதிக்குள் அரசு கார்களுக்கு மட்டும் அனுமதி என்று எப்படி உத்தரவு போடலாம்? எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா? சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும்போது எம்.எல்.ஏ. யார்? என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம்? என்று கேட்டார். அவரிடம் சமாதானம் பேசிய சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்