மாவட்ட செய்திகள்
செல்போன் வாங்கித்தர தந்தை மறுத்ததால், கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

கொளத்தூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். செல்போன் வாங்கித்தர தந்தை மறுத்ததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி 36-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். கட்டிடத்தொழிலாளி. இவருடைய மகள் மாலதி(வயது 18). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், தனது தந்தையிடம் கல்லூரிக்கு எடுத்துச்செல்ல செல்போன் வாங்கித்தரும்படி கேட்டதாகவும், அதற்கு பாஸ்கர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவி மாலதி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்த அவர், வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், மாலதி உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி மாலதி, நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கொளத்தூர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.