தமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2018-09-07 23:27 GMT
மடத்துக்குளம்,

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குரல்குட்டை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 2016-2017-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். பின்னர் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லாமல் ஓட்டுக்கட்டிடத்தில் கல்வி கற்பதை பார்த்த அவர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் 2 அறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் உடனடியாக கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் குரல்குட்டை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குரல்குட்டை பகுதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார். இதுபோல் மலையாண்டிபட்டினம் பள்ளியில் உள்ள கட்டிடத்தின் ஓட்டு மேற்கூரையை அகற்றி விட்டு கான்கிரீட் அமைத்து சமுதாய நலக்கூடமாக மாற்றுவது குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

கால்நடை பராமரிப்புத்துறையில் புதிதாக 854 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே முதல்கட்டமாக விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து பயனாளிகளுக்கு கறவைப்பசு வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கறவைப்பசுக்கள் இந்த மாதத்தில் வழங்கப்படும். மேலும் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்