பொதுமக்களை மிரட்டி வட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

பொதுமக்களை மிரட்டி வட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டு்ம் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-09-07 23:41 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் விவசாயிகள் தனிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தால், அதனை திரும்ப கொடுக்கும்படி விவசாயிகளை மிரட்டுவது மற்றும் தொல்லை கொடுக்கக்கூடாது என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தவிர பொதுமக்கள் தனிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள். அவ்வாறு வட்டிக்கு கடன் வாங்கும் பொதுமக்களும் மிரட்டப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன.

அந்த புகார்கள் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து வட்டி தொழில் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இந்த நிலையில், பொதுமக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் டிஜி.பி.நீலமணி ராஜு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வட்டி தொழில் செய்பவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் நடத்துபவர்கள், அடகு கடைகாரர்கள் பொதுமக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினாலோ, தொல்லை கொடுத்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிப்பவர்கள் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர பொதுமக்களை வட்டி தொழில் நடத்துபவர்கள் மிரட்டுகிறார் களா? என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

மேலும் வட்டி தொழில் செய்பவர்கள் பணம் கேட்டு மிரட்டினால், அதுபற்றி பொதுமக்கள் புகார் அளிக்கவும், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருப்பார். அவரிடம் பொதுமக்கள் புகார் கொடுப்பதுடன், வட்டி பணம் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்