மாவட்ட செய்திகள்
நிஜத்தை கேமராவில் ‘சுடும்’ நிஷா!

இன்று வித்தியாசமான வேலைகளை நாடிச் செல்லும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.
நிஷா புருசோத்தமன்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இப்பெண், தற்போது துபாயில் வசிக்கிறார். ஆனால் அவ்வப்போது இந்தியாவுக்குப் பறந்து வந்து, இங்கு வன உயிரினக் காட்சிகளை தனது கேமராவில் ‘சுட்டு’ச் செல்கிறார்.

திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் பயின்ற நிஷா, அங்கு அப்ளைடு ஆர்ட்ஸ் பாடத்தின் ஒரு பகுதியாக புகைப்படக் கலை கற்றார். அப்படித்தான் இவருக்கு கேமராவின் மீது காதல் பிறந்ததாம்.

ஆனாலும் வன உயிரின புகைப்படக் கலைஞர் என்பது வித்தியாசமான பணிதானே என்று கேட்டால்...

‘‘இன்று பல பெண் வன உயிரின புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர் என்பதுதான் உண்மை. காட்டுக்குள் படம் எடுக்க எங்களால் ஆண்களைப் போல மரத்தில் ஏற முடியாது. சுமார் 10 கிலோ எடை இருக்கும் கேமரா சாதனங்களை சுமந்தபடி காட்டுக்குள் நீண்டதூரம் நடப்பதும் கடினமான விஷயம்தான். ஆனால் இதுவரை, ஒரு பெண் என்பதாலேயே எனக்குப் பிரச்சினை ஏதும் ஏற்பட்டதில்லை’’ என்கிறார்.

நிஷா எடுத்த படங்கள் நேஷனல் ஜியோகிராபிக் போன்ற புகழ்பெற்ற இதழ்களில் வெளியாகி இருக்கின்றன, பிபிசியின் ஆண்டின் சிறந்த வன உயிரின புகைப்படக் கலைஞருக்கான விருதுத் தேர்வுப் பட்டியலில் கடந்த ஆண்டு இடம்பிடித்திருக்கிறார். 89 நாடுகளில் இருந்து வந்த 80 ஆயிரம் பதிவுகளில் இவர் இந்த இடம் பிடித்திருக்கிறார்.

நிஷாவை கானகத்தை நோக்கி உந்தித் தள்ளியது எது?

‘‘நான் பிறந்தது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் கிராமம். எனவே இயல்பாகவே எனக்கு இயற்கை மீது நாட்டம் இருந்தது. ஒரு கட்டத்தில் தனியாகப் பயணம் செய்யத் தொடங்கிய நான், இயற்கையை நெருங்கி ரசிக்க ஆரம்பித்தேன். நுண்கலைக் கல்லூரியில் எனது சீனியர் மாணவரும் நல்ல நண்பருமான சாபு சிவன்தான் எனக்கு புகைப்படக் கலையின் அடிப்படையான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கேமராவை கொண்டு போக ஆரம்பித்தேன், படங்களை எடுத்துத் தள்ளத் தொடங்கினேன். பின்னர் நான் துபாயில் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிவதற்காக இடம்பெயர்ந்தாலும், புகைப்படக் கலையின் மீதான என் மோகம் தீவிரமாகவே செய்தது. அங்கு அது தொடர்பான சில நபர்களின் தொடர்பும் கிடைத்தது. துபாயில் தெருவிலோ, ஆட்களையோ இஷ்டம் போல படம் பிடித்துவிட முடியாது. அப்போதுதான் நான் இயற்கை, வன உயிரினங்கள் பக்கம் என் கேமராவைத் திருப்பினேன்.

நான் எனது பொழுதுபோக்காக புகைப்படக் கலையை வைத்திருக்கவில்லை. இதுதான் என் உயிர்மூச்சு. இதற்கு வசதியாகவே நான் தற்போது என்னுடைய வேலையையும் மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

கேமராதான் என்னை இயற்கையை நேசிக்க வைத்திருக்கிறது, அதை காக்க வேண்டும் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

என்னுடன் ஒத்த கருத்து உடையவர்களுடன் இணைந்து, ஒரு பசுமை இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதன் மூலமாக, உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கிறோம், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற மரக்கன்றுகளை நடுவதன் அவசியத்தை மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகிறோம்.

ஓர் இயற்கை புகைப்படக் கலைஞர், இயற்கையைக் காப்பவராகவும் இருக்க வேண்டும்’’ -அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார், நிஷா புருசோத்தமன்.