மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து; 6 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 3 பேரை கத்தியால் குத்தியது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டை சேர்ந்தவர் ராகுல் (வயது 20). டிரைவர். ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகுல் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரண், அவரது உறவினர், பாலா என்ற பாலச்சந்தர், சரவணன், சூர்யா என்ற சூர்யகுமார் என 5 பேர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துகொண்டும், ஜான்சனின் தூண்டுதலின் பேரிலும் ராகுலை தகாத வார்த்தையால் பேசி தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர்.

இதைபார்த்து தடுக்க வந்த அவரது சகோதரரான மனோஜ், உறவினர் தமிழரசன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து ராகுல் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரண், அவரது உறவினர், ஜான்சன், பாலா, சரவணன், சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.