விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கடையை திறக்க வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-08 23:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் சாலாமேடு துரையரசன் நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக அதன் விற்பனையாளரும், மேற்பார்வையாளரும் வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை திறக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதற்கு பொதுமக்கள், ‘டாஸ்மாக் கடை திறந்தால் மது பிரியர்கள் குடிபோதையில் எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து ரகளையில் ஈடுபடுவார்கள். எனவே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. மீறி திறந்தால் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனிடையே சாலாமேடு ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்து கடையை திறக்க வலியுறுத்தியும், இங்கு டாஸ்மாக் கடை திறப்பதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கோ‌ஷம் எழுப்பியபடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். பகல் முழுக்க வேலை செய்த உடல் அசதியில் மது குடிக்க செல்கின்றனர். மது குடிக்க வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவோ அறிவுறுத்தியும் அவர்கள் கேட்பதில்லை.

ஏற்கனவே சாலாமேடு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அந்த கடைகளுக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு உடனடியாக வீட்டிற்கு வந்து விடுவார்கள். ஆனால் தற்போது சாலாமேட்டில் இருந்த 2 கடைகளையும் மூடிவிட்டதால் இங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஜானகிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்கின்றனர்.

அங்கு சென்று மதுவாங்கி குடித்துவிட்டு நேரடியாக வீட்டிற்கு வருவதில்லை. அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் படுத்து தூங்குகின்றனர். அவர்களை இரவு நேரங்களில் தேடி கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

உடனே அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்