தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Update: 2018-09-08 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம், செங்கம், ஆரணி, வந்தவாசி, போளூர், செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள 5 தாலுகா நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, தலைமை குற்றவியல் நீதிபதி சங்கர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹேமலதா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி ராஜ்மோகன் வரவேற்றார்.

இதில் மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி பக்தவச்சலு, முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீராம், நீதித்துறை நடுவர்கள் விக்னேஷ்பிரபு, விஸ்வநாதன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி லட்சுமி, தேசிய மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக வக்கீல்கள் சுப்பிரமணியன், அருள்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து வங்கி சார்ந்த வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என 9 ஆயிரத்து 217 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 40 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.5 கோடியே 54 லட்சத்து 22 ஆயிரத்து 42-க்கு இழப்பீடு வழங்க சம்பந்தபட்டவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்