ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆறுதல் தருகிறது - வைகோ பேட்டி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஆறுதல் தருகிறது என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறினார்.

Update: 2018-09-08 23:45 GMT

ஈரோடு,

ம.தி.மு.க.வின் வெள்ளிவிழா, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ண பிறந்தநாள் விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் வருகிற 15–ந் தேதி ஈரோட்டில் ம.தி.மு.க. மாநில மாநாடாக நடத்தப்படுகிறது. இதற்கான மாநாட்டு பந்தல் ஈரோடு –பெருந்துறை ரோட்டில் உள்ள மூலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை பார்வையிட்டார்.

பின்னர் ஈரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ம.தி.மு.க.வின் 25 ஆண்டுகால பயணத்தை அறிவிக்கும் வகையில் வெள்ளிவிழா மாநாடு வருகிற 15–ந் தேதி நடைபெறுகிறது. கடந்த 2000–ம் ஆண்டு எழுச்சி மாநாடு ஈரோட்டில் நடந்தது. அந்த மாநாட்டில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். நடைபெற உள்ள இந்த மாநாட்டில் முதல்நாள் நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவு என்ற துயரத்துக்கு பின்னர், தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் அதே செப்டம்பர் 15–ந் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் கலந்துகொள்கிறார். அவருக்கு பதிலாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.

மாநாட்டில் பொன்விழா மலரை தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும், ஜம்முகாஷ்மீர் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான பரூக் அப்துல்லா வெளியிடுகிறார். பாராட்டு பட்டயத்தை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்குகிறார்.

இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள் சரத்பவார், யஷ்வந்த் சின்கா, மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண துணை முதல்–மந்திரி பேராசிரியர் ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கே.எம்.காதர்மொய்தீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ், வேல்முருகன், தெஹ்லான்பாகவி உள்பட முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்திய அரசியலில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. திராவிட லட்சியங்களையும், கொள்கைகளையும், பெரியார், அண்ணா ஆகியோர் வளர்த்தெடுத்த திராவிட லட்சியங்களை எடுத்துச்செல்லும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது. சமீபகாலமாக இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, சிறுபான்மையின மக்களின் உரிமை மறுப்பு என்று ஏராளமான இன்னல்களை ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்துகொண்டு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற 10–ந் தேதி (நாளை) பொதுவேலை நிறத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து இருக்கிறது. இடதுசாரிகளும் அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்று ஆதரவு அளிக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக தொடக்கம் முதலே பழ.நெடுமாறனும், நானும் தொடர்ந்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தோம். தூக்குத்தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்ற சட்ட போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றோம். தற்போது 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உத்தரவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். எனவே தற்போது முதல்–அமைச்சர், அமைச்சரவையை கூட்டி அமைச்சரவையின் முடிவாக 7 பேர் விடுதலையை கவர்னருக்கு அனுப்பி வைத்தால், அவர் மறுக்க முடியாது.

ஏற்கனவே நளினியை பரோலில் வெளிவிடுவது தொடர்பாக அமைச்சரவையின் முடிவினை கவர்னர் ஏற்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. எனவே 7 பேர் விடுதலையில் தடங்கல்கள் இருக்காது. 27 ஆண்டுகள் சிறையில் அனுபவித்த துன்பங்கள் நீங்கி வெளிச்சத்தை காண இருக்கிறார்கள் என்ற வகையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மனதுக்கு அமைதியையும், ஆறுதலையும் தருகிறது.

குட்கா ஊழலில் ஈடுபட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களை முதல்–அமைச்சர் நீக்க வேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

பேட்டியின் போது மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி, அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தை வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்