தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2018-09-08 23:58 GMT
திருவாரூர்,

திருவாரூர் வட்டம், பெருங்குடி ஊராட்சியில் பொது வினியோகத்திட்ட குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். கே.கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து 24 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2011-ம் ஆண்டில் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பிரதி 2-வது சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த குறை தீர்க்கும் கூட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகாவிற்கு ஒரு கிராமம் வீதம் நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடம் பொது வினியோகம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காணப்படுகிறது. இதில் தீர்வு செய்யப்படாத மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் பொது வினியோகத்திட்ட குறைத்தீர்க்கும் கூட்டத்தின் மூலம் இதுவரை 7 லட்சத்து 31 ஆயிரத்து 369 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்வு காணப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 56 ஆயிரத்து 407 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. பொது வினியோத்திட்டத்தின் மூலம் 6 கோடியே 73 லட்சம் பேர் பயன் அடைந்து வருகின்றனர்.

அதில் 30 லட்சம் ஸ்மார்ட் கார்டில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. அவற்றில் 7 லட்சம் பேர் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக உள்ளனர். விரைவில் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்க துறை ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு எந்தவித குறைபாடும் இன்றி பொது வினியோகத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு மக்களின் தேவைகளை அறிந்து அதை காலத்தில் நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மாவட்ட வழங்கல் அதிகாரி சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் குணசீலி, கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் குருமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஜெயலலிதா எண்ணினார். அவரது வழியில் தற்போதைய அரசும் சட்ட வல்லுநர்களை கொண்டு ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை அரசு எடுக்கும். மேலும் ஸ்டாலின் தினசரி அ.தி.மு.க.வை பற்றியும், அ.தி.மு.க. அமைச்சர்கள் பற்றி எதாவது அறிக்கை கொடுக்க வேண்டும் என கொடுக்கிறார். குட்கா வழக்கு ஆரம்பகட்ட விசாரணை அளவில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்