இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார் - தங்க தமிழ்செல்வன் பேட்டி

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார் என புதுக்கோட்டையில் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Update: 2018-09-09 00:18 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச உள்ளார். இதற்கான கால்கோள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு கால்கோல் ஊன்றினார். இதில் ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பரணி.கார்த்திகேயன், நகர செயலாளர் வீரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலகி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டு, பின்னர் மீண்டும் பதவியில் அமர வேண்டும். ஜெயலலிதா இறப்பு இயற்கையானதே, எங்கள் மீது பழி சுமத்தவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆணையம் இதுவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து விசாரணை செய்யாதது ஏன்?. இந்த ஆணையத்தால் உண்மை வெளிவராது. குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்து இருந்தால் பதவியில் இருந்து அவர்களை ஜெயலலிதா தூக்கி இருப்பார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா?.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்